×

ஹரஹர மகாதேவா… கோஷம் முழங்க நெல்லையப்பர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

நெல்லை: தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்டம் இன்று ‘ஹரஹர மகாதேவா தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி’ என்ற பக்தி கோஷம் முழங்க கோலாகலமாக நடந்தது. தமிழகத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா, கடந்த 24ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை, இரவில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்து வந்தது.

ஆனித்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9ம் திருவிழாவான இன்று (2ம்தேதி) நடந்தது. இதையொட்டி அதிகாலை 1.55 மணிக்கு விநாயகர் தேரும், அதனைத்தொடர்ந்து சுப்பிரமணியர் தேரும் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அதன்பிறகு அதிகாலை 3 மணிக்கு மேல் 4 மணிக்குள் சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருளல் நடந்தது, காலை 8.19 மணிக்கு சுவாமி, அம்பாள் தேர்களை சபாநாயகர் அப்பாவு, இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

விழாவில் கலெக்டர் கார்த்திகேயன், எம்எல்ஏக்கள் அப்துல்வஹாப், நயினார் நாகேந்திரன், ரூபி மனோகரன் மற்றும் ஞானதிரவியம் எம்பி உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ‘ஹரஹர மகாதேவா தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி’ என்ற பக்தி கோஷம் முழங்க தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

சுவாமி தேருக்கு முன்பாக அலங்கரிக்கப்பட்ட காந்திமதி யானை சென்றது. அதனைத்தொடர்ந்து பஞ்சவாத்தியங்கள் முழங்க சிவனடியார்கள் ரதவீதிகளில் தேருக்கு முன்பாக வலம் வந்தனர். நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தையொட்டி நெல்லை நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. ரதவீதிகளில் எங்கு பார்த்தாலும் பக்தர்களாகவே தென்பட்டனர். தேரோட்டத்தையொட்டி மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் சுமார் 1500 போலீசார் ரதவீதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post ஹரஹர மகாதேவா… கோஷம் முழங்க நெல்லையப்பர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Harahara ,Mahadeva… ,Nellaiappar temple ,Nellai ,Harahara Mahadeva ,Lord Shiva ,South ,
× RELATED மகாதேவனின் பிரசாதங்கள்